News
OCTOBER 2023
குரு உபதேசம் – 3832
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மகான் அகத்தியர் பெருமானாரும் அவர்தம் திருக்கூட்ட மரபினரும் சரியை, கிரியை, யோக ஞான அறிவை ஊட்டலாம். ஆனால் யோகத்தை நடத்தி ஞானத்தை அளிப்பது சர்வ வல்லமைமிக்க ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை அகத்தியர், சாதகனுக்கு உணர்த்தி ஞானத்தலைவன் திருவடியிலே யோகத்திற்கு தகுதியான பெரும் புண்ணியவான்கள் ஆன்மாவை கிடத்திட ஞானத்தலைவன் முருகனின் கருணையை தயவைப் பெற தூண்டுவார் அகத்தியர், அகத்தியரின் தூண்டலிலே யோகத்திற்கு தயாராகும் புண்ணியவான் முருகனை மனம் உருகி உருகி உருகி பூஜிக்க பூஜிக்க உலக உயிர்களுக்கு உபகாரம் செய்ய செய்ய செய்ய பூஜையும் புண்ணியமும் ஒன்றிணைந்து ஒளி பொருந்திய அறிவு உண்டாகி முருகன் யார்? தான் யார்? தனக்கும் தலைவனுக்கும் என்ன சம்பந்தம்? தான் தோன்றியது, தலைவன் தோன்றியது எல்லாம் அறிய துவங்குவான். சாதகன் தயவு பெருக பெருக தயவே முருகன்தான் என்பதும் முருகனே தயவாய் உள்ளான் என்பதும், உணர்ந்து தயவினால்தான் முருகன் தயவை பெற முடியும் என்பதும் அருட்பெரும் தயவின் துணையால்தான் தலைவன் உண்டாயினான் என்பதும் புலப்படும். அறிவிற்கு முருகன் எட்ட எட்ட தயவு பெருகும், தயவு பெருக பெருக யாருக்கும் எட்டா முருகப்பெருமான் அறிவினில் வெளிப்பட்டு சாதகனுக்கு அருள் செய்ய துவங்குவார். அதன் பின்னரே கசடானது இத்தேகம் என்பதும், மும்மலக் கசடால் ஆன இத்தேகத்தினில் உள்ள மும்மலக் கசடை நீக்கினால்தான் தன்னுள் உள்ள தலைவனை வெளிப்படுத்தவும், தானும் தலைவனும் ஒன்றாகி தலைவனைப் போல தானும் ஆகலாம் என்பதையும் உணர்வான். புண்ணியம் பெருக பெருக பூஜை பலன் பெருக பெருக தானமும் தவமும் பெருக பெருக தேகத்தில் உள்ள மும்மலக் கசடு மெல்ல மெல்ல குறைந்து தலைவன் கருணையால் வாசி வசப்படும் தகுதியுள்ள தேகமாக மாறிடும். தகுதியுள்ள தவதேகமே முருகப்பெருமான் சார்ந்து யோகம் நடத்தும் தேகமாகும் என்பதையும் உணரச் செய்வான்.