News
MARCH 2024
குரு உபதேசம் – 3985
முருகா என்றால், எந்த அளவிற்கு பிற உயிர்களுக்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணுகின்றானோ அந்த அளவிற்கு அவனது நிலை உயரும் என்பதை முருகன் அருளால் அறியலாம். பல உயிர்கள் வாழ்க வாழ்க என மனதார வாழ்த்தும் போது அந்த உயிர்களின் எண்ண அலைகள் உயிர்களை மகிழ்வித்தவனுக்கு சென்று மகிழ்வித்தவன் ஆன்மாவை மேன்மேலும் ஆக்கம் பெற செய்கிறது. எல்லா உயிர்களும் பஞ்சபூதங்களால் ஆனதே, இயற்கையே பஞ்சபூதமாகும். ஆதலினால் பஞ்சபூதத்தினால் ஆன உயிர்களை மகிழ்விக்க மகிழ்விக்க பஞ்சபூதமே மனம் மகிழ்ந்து ஆசி கூறுவதால் பஞ்சபூதத்தால் ஆன இயற்கையும் நம்மை ஆசீர்வதித்து அருள் செய்கிறது. அந்த இயற்கை அருள்கூடி அந்த இயற்கையே நமக்கு கட்டுப்படுகிறது. பஞ்சபூதத்தை இவ்விதமே கட்டுப்படுத்திட உலக உயிர்கள்பால் அளவிலாது அளவிலாது கரையற்ற கருணை கொண்டு அன்புசெலுத்தி உலக உயிர்களிடத்து ஆசிகளை பெற்று இயற்கையை வசப்படுத்தி பஞ்சபூதங்களையும் தம்முள் அடக்கி, ஒடுங்கச் செய்து இயற்கையை வென்று வெற்றி கண்டவன் அருள்மிகு முருகப்பெருமான்.