News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4231
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : சத்தும் அசத்துமாய் இருக்கின்ற உடம்பை ஒரு மென்மையான வேதியியல் செய்து சத்தையும் அசத்தையும் பிரித்தெடுக்கக் கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம்.
உடம்பிலுள்ள சத்தையும் அசத்தையும் பிரித்து சத்தை தன்வயமாக்கிக் கொள்ளவும் அசத்தை நீக்கவும் விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொள்வதோடு எண்ணம், சொல், சிந்தை, செயல் என அனைத்திலும் சைவமாக இருந்து சுத்த சைவராக விளங்கி தினம் தினம் காலை, மாலை, இரவு என தவறாது கடைத்தேற்றும் வல்லமை மிக்க முருகனது மந்திரங்களை நாமஜெபமாக “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாமல் பூஜைகள் செய்து உருவேற்றி முருகப்பெருமானின் ஆசியை பெறுவதோடு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிப்பதை கட்டாயம் கடைப்பிடித்து ஜீவதயவின் வழி நடந்து வருதல் அவசியமாகும்.
இவ்விதமே முருகனது ஆசியைப் பெற்றும், உயிர்க்கொலை பாவம் தவிர்த்தும், பிற உயிர்களுக்கு தயவு செய்து உலக உயிர்களின் ஆசியைப் பெற்றும் வரவர, முருகனது அருள்கூடி சத்தையும், அசத்தையும் அறிகின்ற வாய்ப்பையும், அதை பிரிக்கும் வாய்ப்பையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம் என்று அறியலாம்.
பாலன் முருகனின் பாதம் பணிந்திட
காலத்தை வெல்லும் கருத்து தோன்றுமே!