News
DECEMBER 2024
குரு உபதேசம் 4246
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால்: பரு உடம்பை பற்றியும், நுண்ணுடம்பைப் பற்றியும் அறிந்து, பரு உடம்பின் துணையோடு நுண்ணுடம்பை அடைந்து முதன் முதலில் வெற்றி கண்டவன்தான் முருகப்பெருமான் என்றும் அறியலாம். அவன் அடைந்த அந்த பேரின்ப பெருநிலைதனை, தம்மை உளமார மனமுருகி பூஜித்து வணங்கினோர்க்கும் அருளி அவர்களையும் தம்மைப்போல ஆக்கிக் கொண்டவன்தான் முருகப்பெருமான் என்றும், நாமும் முருகனை வணங்க வணங்க, நம்மையும் அவனைப்போல ஆக்கிக் கொள்வான் என்பதையும் அறியலாம். தாயினும் தயவுடைய முருகப்பெருமான் திருவடிகளை பற்றுகின்ற மக்களுக்கு எந்த வகையிலும், எந்த சூழ்நிலையிலும் இடையூறுகள் வராது. எல்லா சூழ்நிலையிலும், எல்லா செயல்களும் நம்மை காக்க வல்லவன் முருகன் ஒருவனே என்பது எங்களது அனுபவமாகும்.
புண்ணிய முருகனின் பொன்னடி போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
திண்ணிய முருகனின் திருவடி போற்றிட
எண்ணிய அனைத்தும் எளிதில் சித்தியே.
சித்தியாம் முருகனின் திருவடி போற்றிட
முத்தியும் உண்டாம் முனையும் திறந்திடும்.
கற்றேனே முருகனின் கழலிணை போற்றிட
பெற்றேனே பேரின்ப வாழ்வு.