News
DECEMBER 2024
குரு உபதேசம் 4251
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பயனற்ற கவிகள் எவை எவை என்றும் உணரச்செய்து, அவை வெறும் புனைக்கதைகள்தான் என்று உணரக் கூடிய தெளிந்த அறிவைப் பெற்றும் உண்மையில் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல கவிகள் எவை எவை என்பதையும் உணரச் செய்வான் முருகன்.
முருகனே முன்னின்று தோன்றி அருளிச்செய்த மகான் நக்கீரப்பெருமான் எழுதிய கவிகளும், மகான் அருணகிரிநாதர் எழுதிய கவிகளும் இதுபோன்ற முதுபெரும் ஞானிகள் எழுதியதும், முருகப்பெருமான் ஆசிபெற்றவர்களாகிய சித்தர்கள் எழுதிய கவிகளாகிய திருமூலர் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, திருவள்ளுவரின் திருக்குறள், ஒளவையாரின் ஒளவைக்குறள், அகத்தியர் கவிகள் மற்றும் தேவாரம், திருவாசகம் போன்ற ஞானக்கருத்துள்ள ஞானக்கவிகளே படிப்பதற்கு உகந்தது என்பதையும் உணரச் செய்து அக்கவிகளை படிக்கின்ற வாய்ப்பையும், படித்து உணரும் அறிவையும், உணர்ந்து ஞானியர் கூறிய வழியிலே நடந்திட தெளிவும், திடமும் அருள்வான் முருகப்பெருமான்.
கிடைப்பதற்கரிய பிறவி கிடைத்தும், கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைத்தும், வீண் ஆரவார கல்வியாக இல்லாமல் ஞானியர்களை போற்றி புகழ்ந்திட கல்வியை பயன்படுத்தி அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றி கொள்ளும் சிறப்பறிவையும் பெறலாம்.
ஆற்றுப்படையை அருளிய நக்கீரனை
போற்றி மகிழ்வதே புண்ணியமாகும்.
தருமவான் முருகனின் தாளினைப் போற்றிட
வறுமையிலா வாழ்வும் வளமும் உண்டாம்.
உண்டாம் வாழ்வு உயர்ந்த சிந்தையும்
கண்டார்க்கு உண்டாகும் காட்சி.