News
DECEMBER 2024
குரு உபதேசம் 4262
முருகப்பெருமானைப் பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உயிரின் மீதும் குற்றமில்லை, உடம்பின் மீதும் குற்றமில்லை என்பதையும் இவ்வாறு ஏற்பட காரணம் நம்மை தோற்றுவித்த இயற்கைதான் இவ்விதம் செய்துள்ளது என்றும், இயற்கையன்னை மனிதனைத் தோற்றுவிக்கும் போதே காமதேகத்தையும் சேர்த்துத்தான் தோற்றுவித்தாள் என்பதையும் அறியலாம். ஏன் காமதேகத்தை தோற்றுவிக்க வேண்டும். மற்றைய எந்த ஜீவராசிகளும் தோன்றி மறைந்து தோன்றி மறைவதான பரிணாமத்தினை உடையது. ஆனால் இயற்கையை வென்று மரணமிலாப் பெருவாழ்வைப் பெறவும் ஒரு உயிரினம் வேண்டும் என்பதினாலே தான், மனிதனைத் தோற்றுவித்து அதனுள்ளே அற்புத அமைப்பையும் உண்டுபண்ணி மனித தேகத்திற்கு மட்டுமே இயற்கையை வெல்லும் ஆற்றலுடைய ஒளி உடம்பை உள்ளடக்கிய காமதேகத்தை கொடுத்தாள் இயற்கையன்னை. நெல்லிற்கு உமியை வைத்தது போல மனிதனுக்கு உமியாகிய (தவிடு) காமதேகத்தை படைத்தாள் இயற்கை அன்னை. உமி நீங்கிய நெல் முளைக்காது அதுபோல காமதேகம் நீங்கிய ஒளிதேகம் மீண்டும் பிறவி எடுத்துத் தோன்றாமல் உயிருடன் நிலை பெற்று விடும். ஆதலினாலே காமதேகம் அமைந்தது இயற்கையே ஆதலினால் காமதேகத்தின் உதவியுடன் தான் ஒளி உடம்பை ஆக்கம் பெறச் செய்ய முடியும் என்பதையும் மும்மலக் குற்றத்தால் ஆன, காமதேகத்திலுள்ள மும்மலக் கசடை நீக்கினால் தேகத்துள் உள்ள ஒளி தேகம் வெளிப்பட்டு ஜோதி வடிவமாகி நமக்கு மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். பிறப்பு இறப்பற்ற என்றும் அழியாத தேகத்தையும் உடம்பும் உயிரும் இரண்டறக் கலந்து ஒன்றாகிய பெரும் பேற்றைப் பெற்ற ஒளி தேகத்தையும், மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்பதையும் அறியலாம்.
இதை முதலில் பல்லாயிரங் கோடி ஆண்டுகள் பாடுபட்டு பாடுபட்டு சொல்லொண்ணாத வகையிலே அரும்பாடுபட்டு முதன்முதலில் கண்டுபிடித்து பயின்று கடைத்தேறி முதன் முதலில் ஞானம் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவர்தான் ஞானத்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் அறியலாம்.
ஆதலின் ஞானத்தின் முன்னோடி முருகனே என்றும், அவனே நமக்கு ஞானம் அளிப்பவன் என்றும், அவனது அருள் இல்லையேல் ஞானம் பற்றி அணுவளவும் அறிய முடியாது என்பதையும் அறியலாம்.
யாவருக்கும் எட்டா முருகப்பெருமானின் ஆசியை எளிதில் பெறலாம் என்றும், அதற்கு சில அடிப்படை கொள்கைகளை நாம் கடைப்பிடித்தாலே அவனது அருள் கிட்டும் என்பதையும் அறியலாம். பெரியதாய் சாதிக்க வேண்டாம் மிகவும் எளிமையான வழிமுறைதான் அவை என்பதும் தெரியும்.
எல்லாம் வல்ல முருகப்பெருமானின் திருமந்திரங்களை “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தினமும் காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் இரவு 10 நிமிடமும் பூஜை செய்தல் வேண்டும்.
உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு ஜீவதயவே வாழ்வாய்க் கொண்டு வாழ வேண்டும்.
மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து அவர்களது பசிப்பிணி போக்கி அதைக் கண்டு இன்புற வேண்டும் என்ற இம்மூன்றையும் தவறாமல் செய்தாலேயே முருகனது அருள் நமக்குக் கிடைத்து படிப்படியாக முன்னேறி வெல்ல முடியாத காமதேகத்தை வென்று மும்மலக் கசடை நீக்கி ஒளி உடம்பையும் முருகன் அருளால் பெறலாம் என்பதையும் அறியலாம்.
அம்மை அருளிய அருந்தவ முனிவனே
நம்மையும் ஆண்டே நமக்கருள் செய்வன்.
ஐயன் முருகனின் அருளினை போற்றிட
உய்யும் வகையை உணர்த்தியே அருள்வான்.
அருளுவன் முருகனை அனுதினம் பூஜிக்க
இருளும் இல்லை இடரும் இல்லையே.