News
JANUARY 2025
குரு உபதேசம் 4267
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மல, ஜல, சுக்கிலமாகிய ஆணவம், கன்மம், மாயை என்று சொல்லப்படுகின்ற மும்மலக்குற்றம் முருகனருளால் நீங்கப் பெற்று பெறுதற்கரிய ஒளி உடம்பை பெறலாம்.
தொடர் பிறவியை உண்டுபண்ணும் மும்மலக் குற்றத்தால் ஆன காமதேகத்தினின்று மும்மலக் குற்றத்தை நீக்கி பிறப்பு இறப்பு அற்ற ஒளிதேகத்தை முருகனருளால் பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் முடிந்தால் இரவு 10 நிமிடமும் ஞானிகள் திருவடிகளைப் பற்றி மனம் உருகி பூஜைகளை தவறாமல் செய்து வருவதோடு மறவாமல் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ ஞானத்தலைவனான முருகனை மறவாது தொடர்ந்து நாமஜெபங்களை சொல்லி சொல்லி முருகனது அருளைப் பெற்றும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வரவர, நம்மைப் பற்றிய மும்மலக்குற்றம் நம்மை விட்டு விலகி, என்றும் மாறா இளமையான ஒளி தேகத்தை முருகனருளால் நாம் பெறலாம்.
ஞானவான் முருகனை நாளும் போற்றிட
ஆணவம் கன்மமும் அகன்றே ஓடுமே.
ஆனை முகனுக்கு இளைய அறுமுகனைப் போற்றிட
வானவர் போற்றிட வாழ்வும் செம்மையே.
கந்தனை போற்றிட கலியிடர் வெல்லுவர்
சிந்தையும் தெளிவர் சிவகதியும் பெறுவர்.