News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4322
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
யுகயுகமாக ஞானத்தின் தலைவனாக வீற்றிருந்து அருள் செய்து நவகோடி சித்தரிஷி கணங்களை உருவாக்கியது முருகன்தான் என்ற உண்மையை அறியவிடாமல் செய்தது, நாம் இதன் முன் செய்த பாவங்களே என்றும், நாம் செய்த பாவமே உண்மை ஞானத்தலைவனை அறிய ஒட்டாமல் சிறுதெய்வ வழிபாடு போன்ற பல வழிகளிலே நம்மை அழைத்துச் சென்று மேலும் பாவியாக்கியது என்பதையும் அறிந்து முருகனது பெருமையை உணரவும், அவனது அருளைப் பெறவும் முருகனருள் கூடினாலன்றி இயலாது என்றும் அதை ஒரு ஞானம் பெற்ற குருவின் முகாந்திரமாக அறிவதே எளிய முறை என்பதையும் அறியலாம். நாம் செய்த பாவங்களே நம்மை வஞ்சித்து நம்மை திறமையானவர்களாயும், பெரிய அறிவாளிகளாயும், ஞானம் பெற்றவராயும், நாம் செய்வதே சரியென்றும், நாம் செல்லும் பாதையே ஞானத்தின் பாதையென்றும் நம்மை ஏமாற்றி அழைத்து செல்லும். அந்தோ பரிதாபம்! அந்தோ பரிதாபம்!! அந்தோ பரிதாபம்!!! என்ன பாவம் செய்தோமோ? என்ன கொடுமை! தாயினும் தயவுடை தயாபரன் முருகன் கருணையே வடிவானவன், எல்லா பாவங்களையும் மன்னித்து ஏற்று அருள் செய்வான். ஆனால் இவனது பாவம் முருகனை நம்ப ஒட்டாது விலகிச் செல்ல வைக்கும்.
இதுவரை நாம் ஞானத்தலைவன் முருகனை அறிந்திராவிட்டாலும் குற்றமில்லை. இனியேனும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற உண்மை அறிவு வரும்.
நாம் செய்த உயிர்க்கொலை செய்து புலால் உண்ட பாவமே பல ஜென்ம ஜென்மங்களாக நம்மை பின்தொடர்ந்து ஜீவகாருண்ய தலைவன் முருகனை அறியவிடாமல் தடுத்தது என்பதை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டுமென்றும் தினம் தினம் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ முருகனின் திருநாம மந்திரங்களை சொல்லி முருகனது திருவடிகளை மனமார உருகி ஜெபித்து முருகனது அருளைப் பெற வேண்டும் என்றும், ஜீவதயவின் தலைவன் முருகன் அருளைப் பெற கடவுளால் படைக்கப்பட்ட உயர் படைப்பான மனிதர்களின் பசியைப் போக்க மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்கவும் வேண்டும் என்றும் அறிந்து உத்தம மகா ஞான குருநாதர் திருவடி பணிந்து அவர் கூறும் உபதேச வழி பின்தொடர்ந்திட ஞானத்தலைவன் முருகனது அருளைப் பெற்று நாமும் ஞானத்தலைவனை கண்டு தரிசித்து ஆசி பெறலாம் என்பதையும் அறியலாம்.
