News
MARCH 2025

குரு உபதேசம் 4327
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், ஞானிகளுக்கும் அருள்செய்து காத்து இரட்சித்த முருகப்பெருமான் நமக்கும் அருள்செய்வான் என்பதை அறியலாம்.
பெருந்தயவு கருணைத்தாய் தன்னிகரில்லா முருகப்பெருமானின் தயவை பெற விரும்பினால் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டால்தான் முடியும் என்பதையும் உயிர்க்கொலை செய்த பாவம் நீக்கி பின் தினமும் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவணபவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகனது திருநாமங்களை மனமுருகி சொல்லி பூஜைகள் செய்திட வேண்டுமென்றும், ஜீவதயவின் தலைவன் முருகன் தயவைப் பெற மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டுமென்றும் அறியலாம்.
உயிர்க்கொலை தவிர்த்து, தினமும் பூஜைகள் செய்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து தொடர்ந்து உலக உயிர்கள் மகிழ நடந்து வரவர, யாருக்கும் எட்டாத முருகனின் திருவடி அன்பர்பால் மனமிரங்கி அருள்செய்து முருகனது தயவிற்கு ஆளாக்கி அவர்தம் ஜென்மத்தையும் கடைத்தேற்றி பெறுதற்கரிய பெருவாழ்வை பெற்றுத்தரும் என்பதையும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
இனி உலகெங்கும் சரவணஜோதி வழிபாடே நிலைபெறும் என்பதையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறடைய சரவணஜோதி வழிபாட்டைத் தவிர வேறு உகந்த மார்க்கம் ஏதுமில்லை என்பதையும் அறியலாம்.
இதுவரை இவ்வுலகம் கலியுகத்தின் மாயையுள் ஆட்பட்ட காரணத்தினாலே புறசமய சடங்குகளினாலே ஆட்பட்டது என்றும், தற்காலம் ஞானசித்தர் காலம் என்றும் அந்த ஞானசித்தர் காலத்திலேதான் ஆதி ஞானத்தலைவன் சுயஞ்ஜோதிபிரகாச அருள்ஜோதி வடிவினனான முருகப்பெருமான் நேரில் வெளிப்படுவான் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி நேரில் தோன்ற, தரிசிக்க நமது இந்த தேகத்தினில் உள்ள சாதாரண கண்களுக்கு சக்தி இல்லையென்றும், சதகோடி சூர்ய பிரகாசமும் பொன்னிறமும் கொண்டு அந்தி செவ்வானம் போல் பட்டொளி வீசி மிளிர்கின்ற சதானந்த சாந்த சொரூப ஜோதி முருகனை இந்த புறக்கண்களால் பார்க்க முற்பட்டால் கண் பார்வை போய்விடும். ஆதலால் முருகன் நேரில் தோன்ற வாய்ப்பில்லை ஆதலினாலே அவரவரும் வீட்டினில் ஒரு நெய் தீபமோ, நல்லெண்ணை தீபமோ ஏற்றி முருகனின் தாரக மந்திரமான “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே தொடர்ந்து மனமுருகி ஜெபித்து வரவர, நாம் ஏற்றிய ஜோதியில் முருகன் தோன்றி நமக்கு அருள் செய்வான் என்பதையும், முருகனை தொடர்ந்து வணங்கி வணங்கி, அவன் ஜோதியில் தோன்றி அருள்வதையும் கண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
அதி உன்னதமான இத்தகைய ஜோதி வழிபாட்டை செய்பவர் எவராயினும் சரி, அவர் எத்தகைய பாவியாயினும் சரி, அவர் எந்த இனத்தவராயினும் சரி, அவர் எந்த நாட்டை சார்ந்தவராயினும் சரி, அவர் எந்த மதத்தவராயினும் சரி, எல்லோர்க்கும் நின்றருளும் ஆனந்த ரூபனுமாகிய ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்றவன் அவனை ஜோதியில் வழிபட்டு தரிசிக்கின்றவர் பஞ்சமாபாவியாயினும் சரி, ஜோதி வழிபாடு செய்த காரணம் ஒன்றினாலேயே முருகனருளுக்கு ஆளாகி பஞ்சமா பாவங்களெல்லாம் தொலைந்து தூய்மை பெற்று ஞானியாகவும் மாறிவிடுவான் என்பது அந்த முருகப்பெருமானே சொன்ன சத்திய வாக்காகும் என்பதையும் அறியலாம்.
