News
SEPTEMBER 2023
குரு உபதேசம் – 3822
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் செய்து நம்மையும் தம்மை போலவே ஆக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றவன் என்பதும் தெளிவாகும்.
முருகனை வணங்க வணங்க கடவுள் மீதான நம்பிக்கை அதிகமாகி பக்தி பெருகி கடவுளின் ஆசியினால் தான் அனைத்தும் நடக்கிறது என்ற பேரறிவு உண்டாகும். மேலும் முருகனை வணங்க வணங்க கடவுளாய் இருப்பதும் முருகனே என்பது அவனே அகத்தியனாய், ஞானிகளாய், நம்மை வழி நடத்தும் சொற்குருவாய் சற்குருவுமாய் ஆகி நம்முடன் இணைந்து நம்மை கடைத்தேற்றுகிறான் என்பதும் விளங்கும்.
படிப்படியாக முருகன் அருளால் பண்பைப் பெற்று தன் வினைகளை தாமே அனுபவித்து சரியை மார்க்கம் கடந்து கடவுள் நம்பிக்கை உண்டாகி அனைத்தும் அவனே (கடவுள்) எனும் கொள்கையில் உறுதி ஏற்பட ஏற்பட மூன்றாம் படிநிலையான யோகத்தின் மேல் நாட்டம் உண்டாகி யோகம் அறிய வழிமுறை கூறுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.