News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4203
முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசிபெற்றிட்டால் : ஞானமடைதற்கு காரணமாய் இருப்பது மும்மலக்குற்றமுள்ள இந்த மானுடதேகமே என்பதையும், இயற்கை தோற்றுவிக்கும் போதே மும்மலக் குற்றமுடையதாய் இந்த மானுட தேகத்தை தோற்றுவித்தது என்றும் ஆயினும் அந்த தேகத்தின் உதவியுடன் அதனுள் அமைந்துள்ள இரகசியத்தை புரிந்து கொண்டால், விடுபடுமாறு அமைப்பையும் வைத்துள்ளது என்றும் அது நெல்லினைப் போல தேக அடுக்கை வைத்து படைத்துள்ளதையும் தெரிந்து கொள்ளலாம். நெல்லின் மையப்பகுதி அரிசியாகவும் அதன் வெளிப்புறம் மெல்லிய தோல் போன்ற தவிடு என்ற உறையும், அதன் வெளிப்புறம் கடினமான உறை உமியும் உள்ளது போலவே நமது தேகத்திலும் தூய ஒளி பொருந்திய தேகத்தைச் சுற்றியும் ஆன்ம கசடும் மும்மலக்குற்றமும் உடைய சூட்சுமதேகமும் அதனதன் வெளிப்புறம் கடினமான பல ஜென்ம பாவச்சுமைகளை சுமந்ததும், மும்மலக்குற்றத்தால் பஞ்சபூத சேர்க்கையால் ஆன கண்ணுக்கு புலனாகும் பரு தேகமாகிய புறதேகமும் உள்ளதையும் அறிந்து கொள்ளலாம்.
கடினமான பருதேகமாகிய புற உடம்பினில் உள்ள தேகக்கசடையும், மெல்லிய சூட்சும தேகத்தினில் உள்ள ஆன்மாவை பற்றி தொடர்கின்ற குற்றங்களை சுமந்து நிற்கின்ற சூட்சும தேகக் கசடுகளையும் ஒரு சிறப்பான வேதியியல் செய்து நீக்கிவிட்டால், நெல்லின் உமியும் தவிடும் நீங்கி ஒளி பொருந்திய அரிசி வெளிப்படுவது போல ஒளி பொருந்திய தூய்மையான சூட்சுமதேகம் வெளிப்படும் என்பதையும் அறியலாம்.
இதை முதன் முதலில் இயற்கை அன்னையின் பெருங்கருணையால் தயவே வடிவினனாகிய முருகப்பெருமான் உலக உயிர்களிடத்து காண்பித்த அளவிலாத தனிப்பெருங்கருணை தயவினால் பல்லாயிரம் ஆண்டு பாடுபட்டு பாடுபட்டு, முதன்முதலில் அறிந்து கண்டு உணர்ந்து தேகக்கசடை நீங்கி வெளிப்படாத ஒளிதேகத்தை வெளிப்படுத்தி என்றும் பிறப்பு இறப்பற்ற மரணமிலாப் பெருவாழ்வை அளிக்கக் கூடிய ஆயிரம்கோடி சூரிய பிரகாசமுள்ள ஒளிதேகத்தை பெற்று மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றான் என்பதையும் அறியலாம்.
இதற்குரிய அமைப்புகள் அனைத்தும் மாசுற்ற இந்த தேகத்தில்தான் உள்ளது என்பதையும் அதை நாம் இதுவரை செய்த பாவபுண்ணியங்களே மறைத்துள்ளது என்பதையும் முருகனது அருளை முழுமையாக பெற்றிட்டால் சூட்சும தேகத்தை ஆக்கம் பெறச் செய்து ஒளிதேகத்தை நாமும் பெற்று மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்பதையும் அறியலாம்.
முருகனது ஆசியை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து தினம் தினம் தவறாமல் காலை 10 நிமிடமும் மாலை 10 நிமிடமும் முடிந்தால் இரவு 10 நிமிடமும் முதுபெரும் தலைவன் முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி
ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!
ஓம் சரவணஜோதியே நமோ நம
ஓம் சரவண பவ
என்றும், முற்றுப்பெற்ற ஞானிகள் நாமங்களை சொல்லியும் உண்மையான, கடைத்தேற்றவல்ல ஞான பூஜையை செய்தும் வரவர, முருகன் அருளை பெற்று நாமும் மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்று அறியலாம்.
அருளாளன் முருகனின் அடியைப் போற்றிட
இருளெலாம் விலகி இன்பம் உண்டாம்.