News
NOVEMBER 2024
குரு உபதேசம் 4225
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : மரணமிலாப் பெருவாழ்வை கண்டுபிடித்து முதன்முதலில் மரணமிலாப் பெருவாழ்வை அடைந்தவன் முருகப்பெருமான் தான் என்றும், அவனது அளவிடற்கரிய கருணையால்தான் மரணமிலாப் பெருவாழ்வை ஒன்பது கோடி ஞானிகளும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டு மரணமிலாப் பெருவாழ்வை அடைய முடிந்தது என்றும், முருகனது கருணையே மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கு காரணமாய் உள்ளதென்பதையும் முருகன் இல்லையேல் யோகமும் இல்லை, ஞானமும் இல்லை என்பதையும், முருகன் அருளை முழுமையாகப் பெற்றால் நாமும் மரணமிலாப் பெருவாழ்வை அடைதல் கூடும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
முருகனது அருளைப் பெற விரும்புகிறவர்கள் நெய் தீபமோ நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி வைத்து தீபத்தின் முன் அமர்ந்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று வேளை ஒன்றிற்கு குறைந்தது நூற்றியெட்டு முறையேனும் மந்திர ஜெபமாக ஜெபித்து உரு ஏற்ற வேண்டும். ஆயிரம் கோடி சூரிய பிரகாசமுள்ள முருகன் நேரில் தோன்ற இயலாது. ஆதலினாலே அவரவர் “சரவண ஜோதி” மந்திரம் சொல்லி ஏற்றுகின்ற தீபம்தனை சார்ந்து தோன்றித்தான் அருள்வான் முருகன், வேறு மார்க்கமில்லை.
மற்றெந்த வீண் ஆரவாரமான சடங்குகளினாலோ, வேறு வேறான ஜெபதபங்களினால் முருகன் அருளைப் பெறுவதை விட, வேறெந்த வகையில் பூஜை செய்தும், முருகன் அருள் பெறுவதை விட, தூய்மையே வடிவான ஆயிரம் கோடி சூரிய பிரகாசமுள்ள முருகன் தோன்றுவதற்கு ஏதுவான ஜோதியை ஏற்றி அவனை தோன்றிட அழைக்கும், “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் மந்திர உருவினால் விரைந்து ஜோதியில் தோன்றிடுவான் முருகப்பெருமான்.
முருகனை நேரில் காண நம் புற கண்களால் இயலாது. ஆதலினாலே அருட்பெருஞ்ஜோதி வடிவினனான முருகப்பெருமானை ஜோதியின் வழியில் பூஜிப்பதே உண்மை வழிபாடாகும்.
இனி எக்காலத்தும் முருகனுக்கு உகந்த ஜோதி வழிபாடே இவ்வுலகினில் சிறந்த வழிபாட்டு முறையாக உலகெங்கும் போற்றப்பட்டு பின்பற்றப்படும் என்பது ஞானிகள் வாக்காகும்.