News
DECEMBER 2024
குரு உபதேசம் 4234
முருகனை வணங்கிட : தன்னையறிந்து தன்னை வென்ற தகைமை பெற்ற முருகனை பூஜித்து ஆசி பெற்ற மக்கள் கோடானுகோடிபேர். இன்னும் பலகோடி மக்கள் அவனது அருள் திருவடிகளை பூஜித்து ஆசி பெற இருக்கிறார்கள். அப்படி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளக் கூடியவர்களில் நாமும் ஒருவனாக இருந்து முருகனது திருவடிகளைப் பற்றி பூசித்து ஆசி பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற உண்மை ஞானவழிதனை தெரிந்து பூஜிப்பான்.
தன் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற மக்களுக்கு அருள் செய்யக்கூடிய ஆற்றல் முருகப்பெருமானுக்குத்தான் உண்டு என்பதையும் அவனருளின்றி அணுவும் அசையாது என்பதையும் உணர்வான்.
எல்லையில்லா தவவலிமையும், அளவிறந்த ஆற்றலும், பேரொளி வீசி பிரகாசிக்கும் உயர்ஞானமும் பெற்று அகிலாண்ட கோடி பிரம்மாண்டமாய் விரிந்தும் நிற்கின்றவனும், அன்பர்தம் இதயத்துள் சுருங்கி அவர்தம் அன்பிற்கு இணங்கி சுருங்குபவனும், யாருக்கும் எட்டாதவன் அன்பிற்கு கட்டுப்பட்டு இரங்குபவனுமாகிய முருகப்பெருமான்தான் தன்னை வணங்கினோர் பால், கருணை கொண்டு அவர்தம் வினையறுத்து, வினை வென்று நம்பினோரை கடைத்தேற்றி காக்கவல்லவன். அவனன்றி வேறு யாரொருவராலும் இச்செயலை செய்ய இயலாது. மற்றைய எல்லா ஞானிகளும் வணங்கினோர் தம்மை உயர்ஞான வழியில் செலுத்தி கடைத்தேற்றிட மட்டுமே முடியும் அன்றி, வினையறுத்து அழிவிலாமையை அளிக்க இயலாது, அழிவிலாமை எனும் மரணமிலாப் பெருவாழ்வை வினையறுத்து அளிக்கவல்ல வல்லாளன், அதிகாரம் பெற்றவன், ஆதிஞானத்தலைவன், ஞானபண்டிதன், முருகப்பெருமான் மட்டும்தான் அன்றி வேறெந்த ஒருவருக்கும் அத்தகு ஆற்றலோ அதிகாரமே இல்லை! இல்லை!! இல்லவே இல்லை என்பதை தெளிவாக உணர்ந்திடுவான்.
எம்பெருமான் முருகனது திருவருள் கருணையைபெற ஞானிகள் வழிபாட்டால்தான் முருகனது திருவடிகளை எட்டவும் அதை அறியவும் முடியும். ஞானியர் துணை இல்லையேல் முருகனை அறிய முடியாது. சற்குரு துணையால்தான் முருகனை காணவும் கடைத்தேறவும் முடியும். ஞானியரான சற்குருவின் வழிகாட்டுதலினால்தான் முருகனது கருணையை பெறமுடியும் என்றும் உணர்வான்.
தகைமையாம் முருகனின் தாள்பற்றும் மக்களுக்கு
பகைமையில்லா வாழ்வளிக்கும் பார்.
ஞானத்தலைவன் முருகனைப் போற்றிட
ஈனம் தவிர்த்து இன்பம் அருளுவான்.