News
JANUARY 2025

குரு உபதேசம் 4293
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
முதல் தரமான மனிதனை இரட்சிப்பவன் முருகனே என்றும், இரண்டாம் தர மனிதனையும் காப்பவன் முருகப்பெருமானே என்றும், எந்த பயனும் இல்லாமல் வாழ்பவனும், வணங்காதவனுமாகிய மூன்றாம் தர மனிதனையும் அவனுக்குண்டான அனைத்து வாய்ப்புகளையும் அளித்து காப்பவனும் முருகப்பெருமானே என்றும் அறிவதோடு, எந்த பயனும் இல்லாத வாழ்வை வாழக்கூடிய மூன்றாம் தர மனிதன் முற்றுப்பெற்ற ஞானிகளுக்கெல்லாம் தலைவனான முருகப்பெருமானின் நாமங்களை மனமுருகி சொல்லி காத்திடுங்கள் முருகா என கூவி அழைத்து பக்தி செலுத்தி விட்டால், அவனையும் மேல்நிலைக்கு கொண்டு சென்று முதல் தர மனிதனாக மாற்றித் தருவான் பெருங்கருணை தெய்வம் முருகப்பெருமான் என்பதையும் அறிவதோடு, எல்லாம்வல்ல முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பக்தி செலுத்த செலுத்த முருகன் மனமிரங்கி ஒரு கால பரியந்தத்தில் அவன் எந்த தரமுள்ள மனிதராயினும் சரி, அவனை நிலை உயர்த்தி உயர்த்தி இறுதியில் தன்னைப்போல ஆக்கிக் கொள்வான் என்பதையும் அறியலாம்.
ஆதலினாலே எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவன் எப்பேர்ப்பட்ட பாவியாகினும் சரி, பெருங்கருணை தெய்வம், தயவே வடிவான தயாநிதி, மாசற்ற பெருஞ்ஜோதி, அருள் செய்வதே தொழிலாய் கொண்டவனும், அன்பே வடிவானவனும், ஆயிரங்கோடி தாயன்பினும் மிக்க தாயன்பு தயவுடையவனுமான முருகனது திருவடிகளை பற்றிட்டால், பற்றியவன் கடைத்தேறுவது உறுதி என்பதையும் அறியலாம்.
