News
FEBRUARY 2025

குரு உபதேசம் 4301
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் :
இடது கலையையும், வலது கலையையும், சுழிமுனையையும் அறிந்து உணர்ந்து தெளிவடையும் அற்புத கலை ஞானமாம் மெய்ஞானம் தனை பெறலாம். மெய்ஞானம் கைவரப் பெற்று இடது கலையாகிய சந்திர கலையையும் வலது கலையையும் பதியாகிய சுழிமுனையாகிய புருவமத்தியில் முருகப்பெருமானின் திருவருளாலே முருகப்பெருமானே நமது தேகத்தை சார்ந்து வழி நடத்திட உள்ளிருந்து அருள்பாலித்து நிற்க, ஒன்று சேர்த்திட, சேராத இடது வலது கலைகள் ஒன்றிணைந்து பத்தாம் வாசலாகிய புருவமத்தியினை திறந்து கொண்டு உள்ளே சென்று ஒடுங்கும், ஒடுங்கி உருத்தரித்த வாயுவே வாசியாகும். இப்படி முருகன் நம்மை சார்ந்து வாசிவசப்பட செய்து, வசப்பட்ட வாசி நம் தேகத்தினின்று வெளிப்படாது அவனே உள்ளிருந்து காப்பதோடு உடல் வெப்பத்தினையும் அதன் சூழ்நிலையையும் உணர்ந்து மெல்லமெல்ல கனலேற்றி குண்டலி சக்தியை அடையச் செய்வான். குண்டலி சக்தியை விழிப்படைய செய்த உடன், விழிப்படைந்த குண்டலி சக்தி பெருங்கனலாய் மாறிவிடும். பெருங்கனலாய் மாறிய குண்டலியை முருகப்பெருமான் உடல் சார்ந்து கட்டுப்படுத்தி மெதுமெதுவாய் அதிலுள்ள சத்தும், அசத்தும் கலந்துள்ள விந்துவின் கண் உள்ள சத்தை சத்தாக்கி, அசத்தை நீர்த்து போகச்செய்து குண்டலி உண்டாக்கும் வெப்பத்தினால் தூய்மையாக்கி மெதுமெதுவாய் மேலேற்றி அதை உச்சிக்கு கொண்டு வந்து அமிழ்த தாரையாக மாற்றி அந்த அமிழ்தமதை காமமுற்ற காமகசடுடைய தேகத்தினுள் சார்ந்திட செய்து, காமதேகத்தினுள்ள காமமெனும் மாறா கசடை மெல்ல மெல்ல அணுஅணுவாய் நீக்கி ஆயிரம் கோடி சூரிய பிரகாசமுள்ள ஜோதி தேகமாக மாற்றித் தருவான்.
காமதேகம் ஜோதி தேகமாக, ஒளி உடம்பாக மாறினால் அதற்கு பிறப்பு இறப்பு இல்லை, இயற்கையின் நியதிக்கு கட்டுப்படாது, அழிவற்ற தேகமாகி என்றும் மாறா இளமையுடன் விளங்கி மரணமிலாப் பெருவாழ்வை தந்து உடலும் உயிரும் ஒன்றாக கலந்து நிற்கும்.
இப்படிப்பட்ட பெருநிலைதனை பெறுதற்கரிய பெரும் பேற்றினை முருகப்பெருமானின் ஆசியால் மட்டுமே பெறமுடியும் என்பதை அறியலாம்.
யாருக்கும் கிடைக்காத தேவர்க்கும் மூவர்க்கும் எட்டாத முருகப்பெருமானின் அருளைப் பெற அவனது ஆசிகளை பெற வேண்டுமாயின்,
உயிர்க்கொலை தவிர்த்து ?புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் தவறாமல் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ தவறாமல் பூஜைகள் செய்தும், குறைந்தது மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்து ஜீவதயவை பெருக்கிக் கொள்ள முருகனது அருள் பார்வை அவர் மீது பட்டு மெதுமெதுவாக கலை ஞானமாகிய வாசியை அறிகின்றது முதல் தொடங்கி படிப்படியாக முன்னேறி முருகனது அருள் கூடிட கூடிட கலை ஞானமும் கைவரப்பெற்று வாசிவசப்பட்டு முருகனது அருள் பிரவேசம் தேகத்தினுள் நடந்து படிப்படியாக முன்னேறி ஞானம் தனையும் அடைந்து மரணமிலாப் பெருவாழ்வையும் பெறலாம் என்று அறியலாம்.
