News
MARCH 2025

குரு உபதேசம் 4334
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
உலக உயிர்களுக்கு அயராது பாடுபட பாடுபட, காலம் போதாமையை சமாளிக்க உணவைக்கூட துறந்தால்தான் முடியும் என்பதை உணர்வான். அறுசுவை உணவிற்கு ஆசைப்பட கூடாது, எளிமையான உணவை மேற்கொள்ள வேண்டும், உணவின் மீது நாட்டம் கொள்ளக் கூடாது, பசியை பொறுக்க வேண்டும், சுவைக்கு அடிமையாகக் கூடாது, கிடைப்பதை உண்ண வேண்டும். இந்த உணவைத்தான் உண்பேன் என உணவிற்காக காத்திருந்து தொண்டு செய்வதை தள்ளிப்போட்டால் முருகனது ஆசியைப் பெற அந்த உணவே தடையாய் இருக்கும் என்பதை அறியலாம். சத்துள்ள உணவுகளை மிகுதியாக உண்பதால் அறிவு மழுங்கி விடும், உணவே உண்ணாமல் தொண்டு செய்தாலும் உடல் சோர்ந்து தொண்டு செய்ய முடியாது. ஆகையினாலே தொண்டு செய்ய முற்பட்டாகி விட்டது, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும். காலம் இல்லை விரைந்து செல்ல வேண்டும். முருகனது அருளை பெற இக்காலத்தை விட்டால் மீண்டும் வாய்ப்புகள் கிடைக்காது என்றே உணர்வோடு தொண்டு செய்ய வேண்டும்.
அதை விடுத்து, சிற்றுண்டிதான் உண்பேன், சுவையான பதார்த்தம்தான் வேண்டும், சத்துள்ள ஆகாரம் தான் சாப்பிடுவேன், சரிவிகித உணவே சிறந்தது, சூடாகத்தான் உண்பேன், காரம் வேண்டும்; உப்பு வேண்டும்; புளி வேண்டும், என்றெல்லாம் உணவில் குறைசொல்லாமல் ஏதோ பசிக்கு உணவு கிடைத்ததா அது பழைய உணவாய் இருந்தாலும் சரி, கெட்டுப்போகாமல் இருந்தால் போதும் பசியாறிக் கொள்ள வேண்டும். அட! உணவே கிடைக்கவில்லையா பரவாயில்லை இரண்டு பழம் சாப்பிடலாம், சிறிது தண்ணீர் குடித்துவிட்டு தொண்டில்தான் நாட்டம் இருக்க வேண்டுமே தவிர. உணவில், உணவின் சுவையில், உணவின் வகையில், உணவின் தன்மையில் நாட்டம் சென்றால் உலகப்பெருமாற்றத் தொண்டுகளிலே அவர்கள் ஈடுபட்டு கடைத்தேறுவது என்பது கடினமான செயலாய் போய்விடும் என்பதையும் உணர்ந்து முருகனது திருவடிப் பற்றிட கிடைத்ததைக் கொண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்ற பொது சமநோக்கு உணர்வை பெறுவார்.
காலத்தை கடந்த கந்தன் கழலே
ஞாலத்தை வெல்ல நமக்கே துணையென்போம்.