News
MARCH 2025

குரு உபதேசம் 4335
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
எந்த வகையிலும் நாம் பாவியாகாதிருக்க தேவையான சூழ்நிலையையும், அறிவையும் தருவான் தாயினும் மிக்க தயவுடைய முருகப்பெருமான்.
ஜோதி வழிபாட்டின் ரகசியம்
இவ்வுலகினில் எத்தனை எத்தனை வழிபாடுகள் இருந்தாலும் சரி, இதுவரை அவரவர் எந்தவிதமான வழிபாட்டு முறைகளை கடைப்பிடித்தாலும் சரி, ஆதி ஞானத்தலைவன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன், தாயினும் மிக்க தயவுடைத் தனிப்பெருந்தலைவன், தயாநிதி, சதகோடி சூர்யபிரகாசமும் பொன்னிறமும், அந்திசெவ்வானம் போல் மிளிர்கின்றவனுமான சண்முக கடவுளாம் முருகப்பெருமான் ஞானமே வடிவானவன் அவனே முதல்வன்.
ஜோதி முருகன்தனை நேரில் யாதொருவராலும் நமது தூல உடம்பின் கண் உள்ள புறக் கண்களால் ஒருபோதும் காண முடியாது. அப்படி நம்முன் முருகன் தோன்ற நாம் புறக்கண் கொண்டு பார்க்க முயற்சித்தால் நமது கண்கள் குருடாகிவிடும். அப்படிப்பட்ட பெருஞ்சுடரான முருகன், பக்தர் தம் வேண்டுகோளிற்கு இணங்கி அவர்தம் பக்தியை மெச்சி இரங்கி இதம் புரிய ஏதுவான வழிபாடு ஒன்று உண்டென்றால் அது ஜோதி வழிபாடு மட்டுமே.
ஜோதி வழிபாட்டில் மட்டுமே அபிஷேகம் என்ற பெயரிலே உணவுப்பொருளை வீணாக்க தேவையில்லை, மலர்கள் தேவையில்லை, அபிஷேகம் தேவையில்லை, அலங்காரம் தேவையில்லை, பொருள் செலவில்லை, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க தேவையில்லை, எந்தவொரு சடங்கோ, சம்பிரதாயமோ தேவையில்லை, இப்படி எல்லாவிதத்திலும் எந்த மதத்தினருக்கும், எந்த இனத்தவருக்கும் ஏற்றதும், உருவமற்றதும், கடவுளின் உண்மைநிலையை உணர்த்த வல்லதுமான ஜோதி வழிபாடு மட்டுமே. அதுவே உண்மையும் கூட. கடவுளின் வடிவம் ஜோதி வடிவமே.
அருட்பெருஞ்ஜோதி சுடரான முருகனை வழிபட அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தமாகிய பொழுதிலே எழுந்து ஒரு நெய் தீபமோ அல்லது நல்லெண்ணெய் தீபமோ ஏற்றி, தீபத்தின் முன் அமர்ந்து “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ முருகப்பெருமானின் நாமங்களை மனம் உருகி சொல்லி பூஜித்திட வேண்டும்.
வாழ்வில் ஒரு முறையேனும் இப்படிப்பட்ட புனிதமான வழிபாடாகிய ஜோதி வழிபாட்டினை ஒருவன் செய்து வருவானேயானால் அவன் செய்த அந்த ஒரு வேளை ஜோதி வழிபாட்டின் பலன் என்னவெனில் கடுமையான விரதமிருந்து 100 ஆண்டு தவம் செய்ததற்கு ஒப்பான தவப் பயனை பெறுவார்கள் என்பது உண்மையாகும்.
ஏனெனில் வேறெந்த விதமான விரதமுறை வழிபாட்டிலும் வெளிப்பட முடியாத முருகப்பெருமான் ஜோதி வழிபாட்டில் அவர்கள் ஏற்றும் ஜோதியிலே உடன் தோன்றி அருள் செய்வதினாலே ஜோதிவழிபாடு உடனடியாக முருகனது ஆசிகளை பெற்றுத்தர வல்ல வல்லமை மிக்கதான வழிபாடாகும்.
சரி, யாராயிருந்தாலும் ஜோதி வழிபாடு செய்தால் அவர்கள் ஏற்றும் ஜோதியிலே முருகன் தோன்றுவானா எனில் அப்படி இல்லை. அதற்கென்று சில தகுதிகள் உண்டு. முருகப்பெருமான் தயவே வடிவானவன் ஆதலின் தயவுடை முருகனின் தயவை பெற வேண்டுமாயின் அவனால் படைக்கப்பட்ட உயிர்களுக்கு எந்தவித துன்பமும் அளிக்காதவராய் இருத்தல் அவசியம். அவற்றில் முதன்மை தகுதி யாதெனில் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாதவராய் இருத்தல் அவசியம். சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். தெய்வத்தின் பெயரால் உயிர்பலியிடுதல் கூடாது, உயிர்பலியிடும் கோவில்களுக்கு செல்லக் கூடாது. காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமேனும் முருகனது நாமங்களை நாமஜெபமாக சொல்ல வேண்டும். ஜீவதயவுடை முருகனால் படைக்கப்பட்டவற்றுள் முக்கியமாக மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்பதே அத்தகுதிகளாகும்.
இவ்விதமே தகுதி பெற்று ஜோதி வழிபாடு செய்ய செய்ய, அன்பர் தம் வேண்டுகோளிற்கு ஏற்ப அவர்கள் ஏற்றுகின்ற ஜோதியிலே முருகன் தோன்றி அருள் செய்வான் என்பது எங்களது அனுபவ உண்மையாகும்.
………………
கனிவுடைய முருகனின் கழலிணை போற்றிட
பணிவுடைய வாழ்வும் பண்பும் உண்டாம்.
