News
DECEMBER 2024
குரு உபதேசம் 4233
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும் இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும் அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் அறியலாம்.
முருகன் அருளை முழுமையாக பெற்றிட்டால் முருகப்பெருமானை வணங்கி வணங்கி அருள் பெற்றவரும், மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம் என்பதையும் அறியலாம்.
முருகனது அருளும், நாம் பிற உயிர்களுக்கு இரங்கி இதம் புரிந்து செய்கின்ற ஜீவதயவின் வல்லமையும் கூட கூட, இத்தவத்தின் நுட்பங்களெல்லாம் முருகப்பெருமானே நம்மை சார்ந்து நம்மை வழி நடத்தி, நம்மை அருளாளனாகவும் தயவுடையோராகவும் மாற்றி நம்மை நரகத்தில் வீழ்த்தி மரணத்தை தருகின்ற வினைகளை, மும்மலங்களை ஒழித்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றி, என்றும் அழிவில்லாததும், என்றும் இளமையானதுமான ஒளி பொருந்திய ஒளி தேகத்தை நமக்கு அருளி மரணமிலாப் பெருவாழ்வையும் தந்து நம்மையும் முருகனைப் போலவே ஆக்கிக் கொள்வான் என்பதையும் அறியலாம்.
இவையனைத்தும் முருகப்பெருமானின் திருவருட்கருணையால் மட்டுமே முடியும் என்றும், அவனின்றி ஓரணுவும் அசையாது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
முருகப்பெருமானை வணங்க வணங்க, முருகனது திருவருட்பார்வை நம் மீது பட ஆரம்பிக்கும். முருகனது திருவருட்கருணையாலே உணர்வது எது எனில், நாம் வினைகளுக்கு ஆளானோம் என்பதையும், வினைகளை அனுபவிக்காமல் நாம் கடைத்தேற முடியாது என்பதையும் உணரச் செய்து வினைகளை அனுபவிக்க தக்க மன உறுதியையும் அதற்குரிய சூழ்நிலையையும், பரிபக்குவத்தையும் அளிக்கின்றான் முருகன்.
பக்குவம் பெற்ற அந்த பக்தனுக்கு வினையினை நோய் துன்பமாகவும், வறுமையாகவும், பகையாக, மன உளைச்சலாக அளித்து அதன் வழி அவனது ஆன்மாவை பக்குவப்படுத்தி அந்த பக்தன் படுகின்ற துன்பங்கள் வாயிலாக அனுபவிக்க செய்து வினையை தீர்க்கிறான் முருகன்.
ஏனெனில் நாம் முன் ஜென்மங்களில் கோபத்தால், பொருட்பற்றினால், யான் என்ற கர்வத்தால், காமத்தால் நாம் பிற உயிர்களுக்கு செய்திட்ட துன்பங்களால் அந்த உயிர்கள் பட்ட துன்பங்கள் பாவங்களாக மாறி நம்மை பற்றி தொடர்வதினாலே அந்த உயிர்பட்ட துன்பங்களை நாமும் பட்டாலன்றி நாம் செய்த பாவங்கள் நீங்காது என்பது ஆதி ஞானத்தலைவன் முதலாய் எல்லா உயிர்களும் பொதுவானதும், வேதங்கள் கூறுகின்றதுமான இறுதி தீர்ப்பாகும்.
முருகனது திருவடிப் பற்றி பூஜிக்காதவனோ வினையைப் பற்றியும், பாவ புண்ணியங்களைப் பற்றியும் அறிய முடியாது. வினைகளுக்கு ஆளாகி எதற்காக துன்புறுகிறோம் என்பதையே அறியாமல் தமக்கு ஏற்பட்ட துன்பத்தினை தாங்க முடியாது, அதை தீர்க்க மேலும் மேலும், பாவங்களைச் செய்து செய்து, மேலும் மேலும் பாவியாகி மீளா நரகத்தில் வீழ்ந்து பலபல பிறவிகளை முடிவில்லாது எடுத்து எடுத்து செத்தே போகிறான். ஆனால், முருகப்பெருமானை வணங்க வணங்க, வணங்கினோர்க்கு அவர்கள் படுகின்ற துன்பத்திற்கு காரணம் வேறு யாருமல்ல, வேறு எதுவுமல்ல என்றும், நாம் படுகின்ற துன்பத்திற்கு நாம் செய்த பாவங்களே காரணம் என்றும், அதை நாம்தான் அனுபவிக்க வேண்டுமென்றும், அனுபவித்தாலன்றி வினையிலிருந்து மீள முடியாது என்பதையும் தெளிவாக தெரிந்து வினையின் போக்கை புரிந்து வினை வழி சென்று முருகனது அருளால் ஜீவதயவை பெருக்கி எந்த உயிர்களுக்கு துன்பம் செய்தாயோ, அந்த உயிர்களுக்கு நன்மைகள் செய்து வினைகளை நீக்கி, மேலும் வினை சேராமல் தம்மை காத்துக் கொள்ளும் வல்லமையை பெறுவதோடு, வினைக் கொடுமையால் மரணம் ஏற்படாது முருகனது திருவருள் காப்பை பெற்று, சிறுக சிறுக வினை முடித்து தூய்மையானவனாக மாறி, இறுதியில் பெரும் புண்ணியவானாகி அவனும் தலைவனும் ஒன்றாகி விடுவார்கள்.
இதுவே முருகன் நமக்களிக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.
முருகனைப் போற்றி புகழ்ந்து வழிபடுவோம்
ஜீவதயவை பெருக்கி பெறுவோம் பேரின்ப வாழ்வை.
பால முருகனின் பாதம் பணிந்திட
பாலனும் ஆகலாம் பவ வினை தீர்ந்தே.
பணிந்தேன் முருகனின் பாதம் பணிந்தேன்
துணிந்தேன் கூற்றுவனை கொல்லவும் துணிந்தேன்.
கற்றேன் சாகாக் கல்வியும் கற்றேன்
பெற்றேன் அவனருளால் பேரின்ப வாழ்வு.