News
DECEMBER 2024
குரு உபதேசம் 4242
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : சைவ உணவை கடைப்பிடித்திட வைராக்கியத்தை தருவதோடு தீவிர சைவத்தையும், அதன்பின் அதி தீவிர சைவ உணவை கடைப்பிடித்திடவும், அதன்பின் ஞான வாழ்வை தருகின்ற அதிதீவிர அதிவீர சைவ உணவை கடைப்பிடித்திடவும் தக்க சூழ்நிலை, வைராக்கியம், திடசித்தம் ஆகியவற்றை அருளி அதி தீவிர அதிவீர சைவனாக ஞானத்துறை வழி வருகின்ற ஞானியாக நம்மை மாற்றிட அருள் செய்வதோடு ஞானியாகும் வாய்ப்பினை அருளி அதற்குரிய பரிபக்குவம், சூழ்நிலை, உணவு முறை, மருந்துகள், மூலிகைகள், தொண்டர் படை, பொருளாதாரம், தான தருமங்கள் செய்யவும் அதை பெறவும் என ஏராளமான அன்பர் கூட்டத்தையும் அருளுவதோடு அவனே மும்மல கசடுடை தேகமான, சாதகன் தேகத்தை, முருகனே அவனை சார்ந்து அவனை விட்டு இமைப்போதும் பிரியாது உடனிருந்து வழி நடத்தி காத்து, இரட்சித்து, சுத்தமாக்கி பொய்யினில் கலந்த மெய்யை பிரித்து, பொய்யை மெய்யாக்கி, இறுதியில் என்றும் மாறா சத்தாய் ஒளிதேகமாய் சாதகன் தேகத்தை மாற்றி அவனையும் தனக்கு நிகராக, தனக்கு இணையாக, தன்னைப் போலவே ஆக்கிக் கொள்வார் ஆதி ஞானத்தலைவன், அருட்கருணை தெய்வம், தயவே வடிவான தயாநிதி, தனிப்பெரும் தலைமை தெய்வம் முருகப்பெருமான்.
இவையனைத்தும் முருகா! முருகா! என சாதகன் ஞானத்தலைவன், முருகப்பெருமானை அன்புடன் அழைத்த அந்த ஒரு காரணத்தாலே எல்லோர்க்கும் இரங்கி இதம் புரியும் முருகன் திருவருள் கருணையாலே விளையும் அற்புதமான நற்பயனாம்.
தினமும் காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குறைந்தது பத்து நிமிடமேனும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனம் உருகி மந்திர ஜெபமாக சொல்லி உருவேற்றி வருவதோடு, உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு மாதம் ஒருவருக்கேனும் தவறாது பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் எல்லா உயிர்களிடத்தும் முருகப்பெருமானே விளங்குவதாய் எண்ணி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தும் வந்தால் நாமும் இந்த உயரிய பெரும்பேற்றை முருகனருளால் பெறலாம் என்பதையும் அறியலாம்.
பயன்மிக்க முருகனின் பாதம் பணிந்திட
நயம்மிக்க வாழ்வும் நண்ணும் முக்தியே.
உயர்வுடைய முருகனை உண்மையாய் நம்பி
அயர்வின்றி பூஜிக்க அவன் அவனாமே.