News
JANUARY 2025
குரு உபதேசம் 4265
கொல்லா நெறியே குருவருள் நெறி
அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : மனிதன் உணவு உண்பதற்கென்று இயற்கை எல்லையில்லாத வகையிலே அருளி நிற்கிறது. பல்வேறு வகையான தானியங்களும், காய்கறிகளும், கீரை வகைகளும், கனி வகைகளையும், இது தவிர காளான் உணவுகளும், கிழங்கு வகைகளையும், பால், தேன் போன்ற துணை உணவுகளும் என ஏராளமாய் இருக்கும் போது, ஒரு உயிரை துடிக்க துடிக்க கொடுமை செய்து கொன்று, அதன் உடம்பை சுவைக்காக உண்பது பெரும் பாவச்செயல் என்பது உணர்த்தப்படும்.
நம்மை ஒருவர் கொலை செய்ய முற்பட்டு நெருங்கும்போது, நாம் பதைபதைத்து தட்டுத்தடுமாறி உள்ளம் நடுங்க உயிர் சோர்ந்து போக, அச்சத்தின் உச்சிக்கே சென்று தப்பிக்க பெரும் பாடுபடுகிறோமோ, அதுபோலத்தான் நாம் உணவிற்காக பிற உயிர்களை கொன்று அதன் உடலை புசிக்கும் எண்ணத்தோடு பிற உயிரினங்களை நெருங்கும் போதே, நமது எண்ண அலைகள் அந்த உயிர்களை சென்றடைந்த உடன், அந்த உயிரினங்கள் நம்மைப் பார்த்து பயந்து நடுங்கி அலறி ஓலமிட்டு தவிக்கின்றன. அந்தோ பரிதாபம் அந்த உயிர்கள் தமது எண்ணத்தை வெளிப்படுத்த முடியவில்லை, தப்பிக்க வழியில்லை, சொல்ல மொழியில்லை என்ன செய்வது அவை பயந்து நடுங்கி சாகின்றன.
இப்படி உயிர்கள் நடுங்கிய நடுக்கமும், அச்சமும், உயிர் பயமும் கொன்ற பாதகர்களை, கொன்று புசித்த பாவிகளை, என்றாவது ஒருநாள் தாக்கியே தீரும். அந்த உயிர் பட்ட வேதனையை கொன்றவனும், தின்றவனும் அனுபவித்தே தீருவார் என்பதை அறியலாம். இது இந்த பிரபஞ்சத்தில் என்றும் மாற்ற முடியாத சத்தியமாகும். இது முருகனும் அகத்தீசனும் ஞானிகளும் ஒன்றுகூடி கூறிய சத்திய வாக்காகும். கொன்றவன் கண்டிப்பாக கொலையாவான் என்பது சத்தியமாகும்.
மேற்கண்ட அனைத்தையும் அகத்தீசனை வணங்க வணங்க, வணங்குவோர் உணர்ந்து இதுவரை தாம் செய்த பாவங்களை உணர்ந்து, அகத்தீசன் திருவடிகளைப் பற்றி, மேலும் பாவியாகாமல் தப்பித்துக் கொண்டு, உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற கொடும் பாவத்திலிருந்து விடுபடுவான். இதை கற்றவன் வாழ்வான், கல்லாதவன் மாள்வான்.