News
JANUARY 2025
குரு உபதேசம் 4283
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
மற்ற உயிரினங்கள் மகிழ்ச்சியடைய என்னென்னவற்றை செய்திடல் வேண்டும் என்பதை அறியச் செய்து மற்ற உயிர்களை மகிழச் செய்ய வாய்ப்பையும் சூழ்நிலையையும் தந்து மற்ற உயிரினங்களை மகிழச் செய்து அதன் மூலம் உயிர்களின் ஆசிகளை பெறச் செய்து அந்த ஆசியினால் கடவுளை அடையும் வழியையும் தந்து நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றி தருவான் முருகப்பெருமான்.
மற்ற உயிர்கள் மகிழ வாழக் கற்றுக்கொள்பவனே கல்வியாளன், அவனே அறிவாளியும் ஆவான். மற்றயது கற்பவை அனைத்தும் ஜென்மத்தைக் கடைத்தேற்ற பயன்படாது.
மனிதனாக பிறந்த நாம் நம்முடைய சகோதரர்களான உலகின் மனித வர்க்கத்தினர் எவராயினும் சரி, அவர்களை பாராட்டி பேச பேச, நமது பாராட்டுகள் பிறரை மகிழச் செய்வதால் அந்த மனிதனின் ஆன்மா மலர்ச்சியடைந்து நம்மை வாழ்த்தும், பிற உயிர்களின் வாழ்த்து அதுவும் ஆறறிவுள்ள மனிதனின் வாழ்த்து மனிதவர்க்கத்தின் தலைவனான முருகப்பெருமானை விரைந்து மகிழச் செய்வதால் ஞானத்தலைவன் முருகப்பெருமானின் கருணைக்கு ஆளாகி பிற உயிர் மகிழ வாழ்பவனுக்கு ஞானம் பெறும் வாய்ப்பும் மிக விரைந்து கிடைத்து மரணமிலாப் பெருவாழ்வை பரிசாகப் பெறுவான்.
அப்படியில்லாமல் தன் அறிவின் துணை கொண்டு பணிவில்லாமல் பிறரை எப்போது பார்த்தாலும் கடுகடுப்பாகவும், பிறர் மனம் துன்பப்படும் படியும் தொடர்ந்து பேசுவானேயானால் அவனது பேச்சினால் பாதிக்கப்பட்டோர் மனம் வெதும்பும். மனம் வெதும்புகின்றவனது ஆன்மாவும் சோர்ந்து நடுங்குவதால் அந்த ஆன்மாவின் நடுக்கம் சாபமாக மாறி மனம் நோக பேசியவனை தாக்குவதோடு நோயாகவும் மாறிவிடும். மேலும் அவனை பாவியாக்கிவிடும். ஆறறிவு படைத்திருந்தும் மனிதன் பிறஉயிர்கள்பால், அன்பு செலுத்தாமல் துன்புறுத்தும் போது மனிதவர்க்கத்தின் தலைவன் ஞானபண்டிதனின் கோபத்திற்கும் ஆளாவதினாலே அவன் ஒருபோதும் ஞானபண்டிதனின் கருணைக்கு ஆளாகாமல் ஞானமதனை ஒருபோதும் அடைய முடியாமல் போவதோடு பிறப்பெனும் பெரு நரகினுள் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து மீளா நரகத்தை அடையக்கூடும். ஏன் அவன் மனித பிறப்பினின்று வீழ்ந்து கீழான இழி பிறப்பையும் அடைவான்.
ஒரு மனிதனுக்கு முன்ஜென்ம நல்வினைக் காரணமாக கிடைத்த பொருளையும், பதவியையும், புகழையும், அதிகாரத்தையும், பெருமையையும், கௌரவத்தையும் தன் முயற்சியால் கிடைத்ததாக கற்பனை பண்ணிக் கொண்டு தன்னை மறந்து மதியிழந்து தவறாக பயன்படுத்தி தம்மின் எளியோரை துன்புறுத்திட பயன்படுத்துவானேயானால் அவனது செயலே அவனை பாவியாக்கி நல்வினையை இழக்கச் செய்து கொடும் பாவியாக்கிவிடும். பாவியாக பாவியாக அறிவு மேலும் மங்கி கொடுமைகள் பல செய்வதினாலே அடுத்து வரும் பிறவிகளிலே பார்த்தாலே அடித்து கொல்லக் கூடிய விஷ ஜந்துக்களாயும் பிறந்து அடிபட்டே சாகின்ற அவல நிலைக்கும் ஆளாகுவான்.
முருகப்பெருமானை வணங்க வணங்க, பாவ புண்ணியத்தில் நம்பிக்கையும் நமக்கு உள்ள பொன்னும், பொருளும், பதவியும், கௌரவமும் முருகப்பெருமான் நமக்கிட்ட பிச்சையென்பதையும் அறிவதோடு நமக்கு பிறரால் வருகின்ற துன்பங்களுக்கு காரணம் நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவம்தான் என்பதையும் அறிந்து துன்புறுத்தியோர் துன்பத்தை பொறுத்துக் கொள்வானே தவிர, தனது பதவியையோ, அதிகாரத்தையோ, ஆள்பலத்தையோ, பொருளையோ பயன்படுத்தி பழிவாங்கவோ, துன்புறுத்தவோ மாட்டான். இதுவே முருகப்பெருமானை வணங்குவோர் பெறுகின்ற சிறப்பறிவாகும்.
………………
தும்பி முகனுக்கு இளைய முருகனை
நம்பியே பூசிக்க நாம் அவனாமே.
வானோரும் போற்றும் வள்ளல் முருகனை
ஏனோரும் போற்றிட இன்பம் உண்டாம்.