News
JANUARY 2025
குரு உபதேசம் 4282
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
பக்திக்கும், யோகத்திற்கும், ஞானத்திற்கும், வீடுபேற்றிற்கும் முருகப்பெருமான்தான் தலைவன் என்று அறிகின்ற அறிவைப் பெறலாம்.
ஞானத்தலைவன் முருகப்பெருமானின் ஆசியைப் பெற விரும்புகின்றவர்கள் அதற்கான தகுதிகளைப் பெற வேண்டும் என்பதையும் அவை, எவை என்பதையும் அறிவார்கள்.
1) உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை முதலில் மேற்கொள்ள வேண்டுமென்றும், அதுவே நாள்பட நாள்பட, உணர்வை தூண்டக் கூடிய மசாலா பொருட்களையும், உடம்பிற்கு தீவிர உரமேற்றும் கொழுப்பு சத்துள்ள பொருட்களையும் தவிர்த்து அதிதீவிர சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். நிலை உயர உயர, உப்பு, புளி, காரம் நீக்கிய அதிவீர சைவ உணவையும் மேற்கொள்ள வேண்டும்.
2) தினமும் குறைந்தது காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் ஒரு வெண்ணிற துணியில் அமர்ந்து ஒரு ஜோதி ஏற்றி வைத்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் முருகா” என்றோ முருகனின் திருநாமங்களை தவறாது மனமுருகி மனம் ஒன்றி நாமஜெபமாகிய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும்.
3) ஜீவதயவின் தலைவன், ஜீவதயவே வடிவான தயாளப்பிரபு முருகப்பெருமானின் ஆசியை பெற பூஜை மட்டும் போதாது என்றும், அவசியம் உலகின் உயிர்களின் ஆசியையும் பெற்றால்தான் முருகனது ஆசியைப் பெற முடியும் என்பதையும், ஆதலின் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்பதையும், உலகின் உள்ள அனைத்து ஜீவர்களையும் தம்முயிர் போல எண்ணுகின்ற பக்குவமும் உலகினரை சாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்று ஒத்த சகோதரர்களாயும், உலக உயிர்களுக்கு உற்ற துன்பமானது தனக்குற்ற துன்பமாக எண்ணி அதை நீக்க முற்படவும் வேண்டும் என்பதையும் அறியலாம்.
4) இதுவரை இவ்வுலகினில் இதுகாலும் வழக்கத்தில் உள்ள சடங்குமுறை பூஜைகளெல்லாம் இனிவரும் காலம் இருக்காது என்கிற ஞானியர் கருத்தின் உண்மையான உட்பொருளையும் உணர்வார்கள்.
சத கோடி சூரிய பிரகாசமுள்ள முருகப்பெருமான் நேரில் தோன்ற முடியாது என்பதையும் அறிந்து பக்தர்கள் “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்று கூறி, ஏற்றுகின்ற ஜோதியின் வழியில்தான் தோன்றி அருள்வான் என்பதையும் அறியலாம்.
5) எம்மதமாயினும் சரி, எந்த இனமாயினும் சரி, எந்த வழிபாடாயினும் சரி, எந்த வர்க்கமாயினும் சரி, எந்த முறையாயினும் சரி, இனிவரும் காலம் ஞானசித்தர் காலம் என்பதினாலே, உலகின் எல்லா ஆலயங்களிலும் சரி, சடங்கு பக்தி வழிபாடு முறைகள் நீங்கிவிடும் என்றும், எங்கும் சரவண ஜோதி வழிபாடே சிறந்து விளங்கும் என்றும், எந்த ஆலயமாயினும் சரி ஆங்கே ஜோதி வழிபாடே தோன்றி நிற்கும் என்றும் மற்றைய சடங்குகளெல்லாம் வழக்கொழிந்து அவ்ஆலயங்களெல்லாம் வழிபாடு தலங்களாக மட்டுமே விளங்கி நிற்குமென்றும் அறிந்து சரவண ஜோதி வழிபாட்டை உறுதியுடன் செய்திடல் வேண்டும் என்று ஞானிகள் நூல்களில் கூறி வைத்த கருத்துக்களையும் அறியலாம்.
இவ்விதமே கடைப்பிடிக்க கடைப்பிடிக்க, கடைப்பிடித்தவரெல்லாம் முருகனது ஆசியைப் பெற்று முருகனது தரிசனமும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
………………
மூல குருநாதன் முக்கண் மைந்தனே
ஞாலத்தை ஆள நியாயம் தோன்றுமே!
கலியுக வரதன் கந்தனே உலகை
நலிவுறா காப்பான் நாடு செழிக்கவே.